05/02/2024
தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் இயங்கும் பொது நூலகங்ளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்வுகள் சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் இடம்பெற்றன.
சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.தயாரத்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன்முதல் கட்ட நிகழ்வாக அமீர் அலி பொது நூலகம் அவ் இடத்தில் ஆரம்பிக்கப்ட்டு 40 வருட பூர்த்தியை முன்னிட்டு மர்ஹூம் எம்.ஏ.அமீர் அலி அவர்களின் புதல்வரான ஏ.ஏ.லரீப் அவர்களின் முழு அனுசரனையில் “அமீர் அலி வலிமையின் கோபுரம்” எனும் நினைவு மலர் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட நிகழ்வாக தேசிய வாசிப்பு மாத போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகர் கலாநிதி எம்.எம். மஸ்ரூபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன்போது முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌசாட் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இளைஞர் வலூவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கிலும் சம்மாந்துறை பிரதேச சபையினால் நடாத்தும் இலவச கொரிய மொழி பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மர்ஹூம் எம்.ஏ.அமீர் அலி அவர்களின் குடும்ப உறவினர்களும், கல்விமான்கள், ஊர்ப் பிரமுகர்கள், நூலகர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.