சம்மாந்துறை பிரதேச சபையினால் முஹல்லா மஹல்லா மையவாடியினை மர்ஹூம் M.A.அப்துல் மஜீட் ஆத்மீக பூங்காவாக பிரகடனப்பத்தி அதன் பெயர்ப் பலகையை பொருத்தி உத்தியோகபூர்வமாக திரை நீக்கம் செய்யும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
முஹல்லா மஹல்லா மையவாடியின் உருவாக்கத்திற்கு காரண கருத்தாவாக இருந்த முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களின் நாமத்துடன் கூடிய இப்பெயர்ப் பலகையினை திரைநீக்கும் நிகழ்வு அன்னாரின் உறவினரும், மருமகனுமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களின் மகளான திருமதி பளுனா நௌஷாட் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இதில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் ஐ.எம் ஹனீபா, சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.எல்.எம்.பசீர் , பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முஹல்லா மஹல்லா மையவாடிக்கான வெளியூரிலிருந்து வருகை தரும் நபர்களின் வசதி கருதி மல்கம்பிட்டி வீதியில் மல்-15ம் வீதியிலும், மையவாடி வீதியிலும், மையவாடியிலும் தூரத்தினைக் காட்டக் கூடிய வகையில் சபைத் தீர்மானத்திற்கமைய பெயர்ப் பலகை இடுவதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.